வேலூரில் திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணிற்கு, தனது 18 வயது கூட நிறைவடையாத மகனை திருமணம் செய்ய தந்தையே ஏற்பாடுகள் செய்துள்ளார்.

வேலூரை அடுத்த அரியூர் கோவித்த ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது 18 வயது கூட நிறைவடையாத நான்காவது மகனுக்கு வரும் 12ம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். கணவனின் இந்த திடீர் முடிவை எதிர்த்த மனைவி கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின்பு தான் உண்மை தெரியவந்துள்ளது. மணிகண்டனின் உறவுக்கார பெண் ஒருவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு மறுமணம் செய்து வைத்தால் பணம், நகை, கார் என எது வேண்டுமானாலும் தருவதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். தனது கடன் பிரச்சனையை குறைக்கவும் பண ஆசைக்காகவும் தனது மகனை கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து சிறுவனின் தாய் போலீஸில் அளித்த புகாரின் பேரில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாராணையில் அந்த பெண்ணுக்கு சிறுவனை விட 10 வயது அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் சிறுவனின் தந்தை மணிகண்டனிடம் சிறுவனுக்கு 21 வயது நிரம்பாமல் திருமணம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினர். மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.