உத்திரப்பிரதேசம் வந்தடைந்த ஷ்ராமிக் சிறப்பு இரயிலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கழிவறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நாள் ஒன்றுக்கு நூறு கதைகள் செய்திகளில் வலம் வருகின்றது. அவர்களில் இது வரை பல பேர் இலக்கை அடையும் முன்னே இறந்து விடுகின்றனர். அவர்கள் வீடு செல்லவது சாவாலகவும் சாதனையாகவும் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சாலை மார்க்கமாக சென்ற தொழிலாளர்கள் வழியில் பசி பட்டினியால் சுருண்டு விழுந்து இறந்து விடுகின்றனர். அக்கினி நட்சத்திரத்தையும் பொருட்படுத்தாது மக்கள் கூட்டம் கூட்டமாக நடைபயணம் சென்றனர். இதன் பிறகு மத்திய அரசு ஷ்ராமிக் சிறப்பு இரயில்களை இயக்க அனுமதித்தது. இருப்பினும் இறப்பின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் பீகார் இரயில் நிலையத்தில் இறந்த தாயின் சடலத்துடன் விளையாடிய குழந்தை வீடியோ வெளியாகி காண்போர் நெஞ்சை கனக்க செய்தது.
இந்த வரிசையில் நேற்று ஜான்சி நகர் ரயில் நிலையத்தில் தூய்மைபணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட போது ரயில் கழிவறையில் ஒரு ஆண் சடலம் கிடைத்துள்ளது. விசாரணையில் மும்பையில் தினக்கூலியாக வேலை செய்யும் மோகன்லால் சர்மா என தெரியவந்துள்ளது. அவரது கையில் ரூ.28 ஆயிரமும் சில புத்தகங்களும் கிடைத்துள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் இறப்பின் காரணம் தெரிய வரும் என அவரது உறவினர்களிடம் உறுதியளிக்கப்பட்டது.