முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட 2-வது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான் (47). இவர் தோல் ஆடைகளைக் கொண்டு டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜெபினா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் இவருக்கும் அசினா பேகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவீட்டார் சம்மதத்தோடு இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை நைணியப்ப தோட்டம் 6-வது தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஷாஜகான் தனது முதல் மனைவியான ஜெபினாவை மட்டுமே கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 27ஆம் தேதி வீட்டிற்கு வந்த ஷாஜகானிடம் 2-வது மனைவி
அசினா, முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஷாஜகான், அசினா தூங்கும் போது தலையைனையை எடுத்து முகத்தில் அழுத்தியுள்ளார். மேலும், சால்டிங் மிஷினை வைத்து கையில் கரண்ட் ஷாக்கும் கொடுத்துள்ளார். பின்னர் 28ஆம் தேதி காலை அசினாவின் தாயார் வீட்டிற்கு சென்று, அசினா ஷாக் அடித்து இறந்து விட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதில், சந்தேகமடைந்த அசினாவின் தாயார் ஷாபிரா பேகம், வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக இவ்வழக்கில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி மற்றும் உதவி ஆணையர் இருதம் தலைமையில் சிறப்பு விசாரணைப்படை அமைக்கப்பட்டது. தற்கொலை வழக்காக பதியப்பட்டிருந்த இவ்வழக்கு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனையில் இயற்கைக்கு முரணான மரணம் என தெரியவந்ததை அடுத்து, ஆய்வாளர் தவமணி ஷாஜகானை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். முதலில் ஒப்புக் கொள்ள மறுத்த ஷாஜகான், பின்னர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். இரண்டாவது மனைவியான தன்னை கவனிக்கவில்லை என சண்டையிட்ட காரணத்தினால் தூங்கும் போது கணவனே மனைவியை கொன்று நாடகமாடிய சம்பவம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.