மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சென்னையில் தன் மகளைப் பார்த்து விட்டு திரும்பும்போது ரயிலில் தூங்கி விட்டதால் கேரளாவை சென்றடைந்துள்ளனர். அங்கு அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து கேரள போலீஸார் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(70). இவர் சென்னையில் உள்ள தன் மகள் பிரியாவை பார்க்க இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரியாவை பார்த்துவிட்டு மதுரைக்கு ரயிலில் திரும்பிய பொழுது தூங்கிக் கொண்டே வந்ததால் மதுரையில் இறங்க தவறி விட்டார் அந்த ரயில் மீண்டும் கேரளா மாநிலம் கொல்லம் ரயில் நிலையத்திற்கு சென்றது அங்கு அனைவரும் இறங்கும்போது மூதாட்டியும் இறங்கியுள்ளார் பின்புதான் தெரிய வந்தது அவர் கேரளா சென்றடைந்தது.
இதனால் அதிர்ச்சியான மூதாட்டி அங்குள்ள போலீசாரின் உதவியை நாடியுள்ளார். போலீசாருக்கு தமிழ் தெரியாததாலும் மூதாட்டிக்கு மலையாளம் தெரியாததாலும் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்பு போலீசார் கஸ்தூரியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து அருகிலுள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பரிதவித்த மூதாட்டி தன்னால் இயன்ற வரை அனைவரிடமும் உதவி கேட்டுள்ளார். இதற்கிடையில் மகள் பிரியா எண்பது நாட்களாக தாயை பல வழிகளில் தேடி வந்துள்ளார்.
பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு மனநல காப்பகத்தில் இருந்து மூதாட்டி, பிரியாவை தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கியுள்ளார். இதனால் பிரியா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கஸ்தூரியை மீட்டுத்தருமாறு மனு ஒன்றை அளித்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுத்த மதுரை கலெக்டர், கொல்லம் கலெக்டரை தொடர்புகொண்டு கஸ்தூரியை மீட்டு பிரியாவிடம் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரியா அவர்கள் கூறியபோது ‘என் தாயை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி 80 நாட்கள் அடைத்து வைத்திருந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.