கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை இளைஞர் இருவர் குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை காலத்தில் வீசி வரும் கடும் வெயில் காரணமாக வன விலங்குகள் பலவும், தங்களது இருப்பிடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் வசிப்பிட பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன.
அந்தவகையில், வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், முகவரி தெரியாத ஒரு இடத்தில் சராசரியாக மனித உயரத்தை கொண்ட ராஜநாகம் ஒன்று தோட்டப் பகுதிக்குள் புகுந்துள்ளது.
அதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், எந்த பயமும் இன்றி அங்கிருந்த வாளி ஒன்றில் தண்ணீரை பிடித்து வெயிலால் வாடியிருந்த அந்த பாம்பின் மீது ஊற்றியுள்ளார்.
அந்த பாம்பும் எந்த வித ஆவேசமும் இன்றி அமைதி காத்து தண்ணீரை தன்மீது ஊற்றுவதை அனுமதித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், அந்த இளைஞர் அந்த பாம்பின் தலைபாகத்தை தொட்டு பார்த்து விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.