மலையாள சினிமாவின் பிரபல நடிகரும், 80களில் பரவலாக அறியப்பட்ட கதாநாயகனும், முத்தமிழ் சூப்பர்ஸ்டார் பிரேம் நசீரின் மகனுமான ஷானவாஸ் (வயது 71) திருவனந்தபுரத்தில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 11.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியில் அகாஷ்வாணி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷானவாஸ், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 1981-ம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கிய ‘பிரேமகீதங்கள்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஷானவாஸ், காதல் நாயகனாக துவங்கி வில்லன் கதாபாத்திரங்கள் வரை பன்முக திறமையை வெளிப்படுத்தியவர்.
40 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் 96க்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1987-ல் வெளியான ‘ஜாதிப்பூக்கள்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களைத் தவிர, ஷானவாஸ் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more: மாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை… ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு…!