
தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் வரை அதிமுக அரசு ஊழல் முறைகேடு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளர் வீரபாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து அவர் தெரிவிக்கையில், அதிமுக அரசு தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளுக்கு, 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமிராக்கள் வாங்கியுள்ளனர். ஒரு சிசிடிவி கேமிரா ரூ58,840 என வாங்கி சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதனை வாங்குவதற்கு முன்னர், திருச்சி ஜாய் ஏஜென்சி, ஈரோடு செல்வா என்டர் பிரைசஸ் , கோயம்புத்தூர் எம்.எம்.எம்.ஏ என்டர்பிரைசஸ் போன்றவற்றில் இருந்து கொட்டேசன்கள் பெறப்பட்டுள்ளது. இறுதியில் திருச்சியில் உள்ள ஜாய் ஏஜென்சியில் சிவகங்கை மாவட்டத்திற்கு 457 சிசிடிவி கேமிராக்கள் 26 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரத்து 780 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

இதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என தெரிந்ததையடுத்து, சிசிடிவி கேமிராக்களை மொத்தமாக கொள்முதல் செய்த கடையில் விசாரித்த போது, சிசிடிவி கேமிராக்களை ஆயிரக்கணக்கில் வாங்கும்போது ஒரு சிசிடிவியை ரூ.22 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்திற்குள் தான் வரும் என தெரிவித்தனர்.
ஆனால் அதிமுக அரசு ஒரு சிசிடிவி கேமிராக்களை ரூ 58, 840 க்கு கொள்முதல் செய்துள்ளனர். ஏஜென்சி நிறுவனம் ரூ. 28, 840 என தெரிவித்துள்ள போது பாதிக்கு பாதி ஊழலை அரசு நடத்தியுள்ளது அம்பலாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 12 கோடி ரூபாய் வரை என்றால் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் வரை ஊழலில் அரசு ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
எனவே தமிழகத்தில் சிசிடிவி கேமிராக்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது ஒருபுறமிக்க, தற்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 235 கொரானா விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகையின் விலை ரூ.3,000 மட்டுமே ஆனால் பலகைகளுக்கு ரூ.29 லட்சத்து 8 ஆயிரத்து 685 பட்டுவாடா செய்துள்ளதை ஊராட்சி மன்றத்தலைவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுதவிர, ஏற்கனவே மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் மாவட்ட அளவில் ரூ.12 கோடி ஊழல் நடந்ததாக அரசின் சமூக தணிக்கை கண்டறிந்துள்ளது. அதன் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பின்பும் அவர்களுக்கே தெரியாமல், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கிருமி நாசினி ரூ.60 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுக்குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துவருகிறது.