சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்று அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் சசிகலா எப்போது விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பெங்களூருவை நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல்களை கோரியிருந்தார். அதன்படி சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினால் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி (27.01.2021), விடுதலையாவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்தாவிட்டா 2022 -ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி (27.02.2022) விடுதலையாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.10 கோடி அபராதம் கட்ட தவறினால் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும்.
இதனிடையே, அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகையான ரூ.10.10 கோடி அவரது வழக்கறிஞர் சார்பில் செலுத்தப்பட்டு விட்டது. அபராதத் தொகையை செலுத்தி விட்டதால், சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி, சசிகலா சிறையில் இருந்து, விடுதலையாக இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா தரப்பு வக்கீல்கள் சார்பில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 1996-ல் 26 நாட்களும், கடந்த 2014-ல் 22 நாட்கள் என 48 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இந்த 48 நாட்களை சிறை தண்டனையில் கழித்து முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க, தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், தண்டனை காலம் முடிவதற்கு முன் சசிகலா விடுதலை செய்யப்பட்டால், அது அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என அக்கட்சி மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது. எனவே, சசிகலாவை வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை எந்த சிறப்பு சலுகையையும் காரணம் காட்டி முன் கூட்டியே விடுதலை செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.