மாநிலங்களவைத் தேர்தலில் மேலும் 11 இடங்கள் கிடைத்திருப்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் பலம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் காலியாகும் உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக வேட்பாளர்கள் எரன கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும், அருணாசலில் பாஜக வேட்பாளர் நபாம் ரேமியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து நேற்று நடைபெற்ற தேர்தலின் முழு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புவனேஷ்வர் கலிதா, பிரேம் சந்த் குப்தா ஆகியோர் 5-ஆவது முறையும், திருச்சி சிவா, கேசவ் ராவ், பிஸ்வஜீத் டைமாரி, பரிமல் நத்வானி ஆகியோர் 4-ஆவது முறையும், சரத் பவார், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் 2-ஆவது முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தினேஷ் திரிவேதி, நபம் ரபியா ஆகியோர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேவே கவுடா, சிபு சோரன் ஆகியோர் 2-ஆவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், மொத்தமாக ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 8 பாஜக வேட்பாளர்கள் வென்றனர். இதனால் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 86 இடங்கள் உள்ளன. மாநிலங்களவையில் 123 இடங்களை பெற்றால் பெரும்பான்மை பெற முடியும். இருப்பினும், அக்கட்சியுடன் நட்பு பாராட்டி வரும் அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்கும்பட்சத்தில், முக்கிய மசோதாக்களை பாஜக கூட்டணியால் எளிதில் நிறைவேற்ற முடியும்.