சென்னையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 4 நீட்டிக்கப்பட்டு, தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன. எனினும் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் குறைந்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்…
இந்தியாவில் கடந்து சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் தீவிரமைடந்து வரும் நிலையில் மொத்த பாதிப்பு 2.86 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்த சூழலில் சென்னை உட்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த தகவலுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே அரசால் தன்னிச்சையாக ஊரடங்கை நீட்டிக்க முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், மருத்துவர் வல்லுனர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவை கூட்டத்தை கூட்டியே ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் தமிழக மொத்த கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்பு சென்னையில் ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்கும் படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளி ஊருக்கும் செல்ல இருப்பவர்கள், செல்ல நினைப்பவர்கள் தங்கள் பயணத்தை விரைவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இம்முறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இருக்கக்கூடும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.