விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவருவதில் இன்னும் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரை கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிதான் விஜய் மல்லையா. இந்தக் கடன்களை திருப்பி செலுத்தாமல் இவர் த்ற்போது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இவரை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து மல்லையா தன்னை இந்தியாவிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடது என இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை கடந்த மாதம் இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து மல்லையா விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. அவர் மும்பைக்கு கொண்டுவரப்படவுள்ளார் என்றும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக மல்லையா இங்கிலாந்து நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடியும். இதில் உள்ள சட்ட சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
இங்கிலாந்தின் சட்டப்படி, ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என உயர் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர் 28 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வேளியேற்றப்பட வேண்டும். இதில் உள்ள சட்ட சிக்கல்கள் முடிவடைந்த பின்னரே அவரை இந்தியாவிற்கு கொண்டுவரமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.