தமிழகத்தில் வாகனங்களே ஓடாத சாலைகளை நெடுஞ்சாலைத்துறை புதுப்பித்து வருவதும், விஐபி சாலை என்று கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் 59,000. கி.மீ சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, சாலைகளை அகலப்படுத்துவது என பல்வேறு சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சராசரி ரூ. 3,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி, சாலைகளை புதுப்பிப்பது, அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், வாகனங்கள் வராத சாலைகளில் இந்த திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரணமே இன்றி, சாலைகளை மேம்படுத்துவது, அகலப்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தாலும், அது முக்கிய பிரமுகர் பயன்படுத்தும் சாலை எனக்கூறி கணக்கு காட்டி விடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இது போன்றொரு சம்பவம் தான் சமீபத்தில் மதுரையில் நடந்துள்ளது. மதுரை ஊரக பகுதியில் உள்ள சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தி, முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சாலை எனக்கூறி கணக்கு காட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதேபோன்று காரணமே இன்றி, சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் மட்டும் 1000 கி.மீ நீள சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.