சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறிய முதல்வர், தற்போது அந்த வழக்க சிபிஐக்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்.. சிறையில் தந்தை மகன் உயிரிழப்பு.. போலீசார் கொடூர தாக்குதல்… இவை தான் கடந்த ஒரு வாரமாக நாம் அதிகமாக கேட்கும் வார்த்தைகள்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர்கள் தான் தந்தை – மகனான, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்.. ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்தது தான் அவர்கள் செய்த மிகப்பெரிய குற்றம்.. அதற்காக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது..
இதில் குற்றம்சாட்டப்பட்ட 2 எஸ்.ஐக்கள், 2 காவலர்கள், ஒரு காவல் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 2 பேரின் மரணத்திற்கு பணியிட மாற்றம் தீர்வாகாது எனவும் தந்தை, மகன் இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் முதல்வர் கூறியிருந்தார். உடற்கூறாய்வு அறிக்கையே வராத நிலையில், அவர்கள் உடல்நல பாதிப்பால் தான் உயிரிழந்தனர் என முதல்வர் எப்படி கூறினார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில் தான் நேற்று இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், சாத்தான்குளம் வழக்கு, சிபிஐக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாக முதல்வர் கூறிவந்த நிலையில், தற்போது ஏன் சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று கூறுகிறார் என்பது தான் மிகப்பெரிய கேள்வி..

முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் காவல்துறை மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தள்ள நிலையில், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய முதல்வரே, அவர்களின் குற்றத்தை மூடி மறைக்க முயல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் தற்போது சாத்தான்குளம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால், சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. ஒரு மாநிலத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் இந்த முரண்பாடான கருத்துகள் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.