4-ம் கட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு, நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று பிரதமர் மோடியை, மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா மற்றும் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், புதிய தளர்வுகள் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், ஆலோசனை நடத்திய அமித்ஷா ஊரடங்குக்கு பிந்தைய திட்டம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததார்.

இதனிடையே நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கவே மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நாட்டில் 70 சதவீத கொரோனா பாதிப்பு கொண்ட நகரங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் கோயில்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.