திருப்பதி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் அதிகம் கூடும் நாட்டின் திருப்பதி உள்ளிட்ட பல பணக்கார கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5ம் கட்டமாக நீட்டிக்கபட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 8ம் தேதி முதல் வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, 75 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக வரும் 8-ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் ஆகியோர் மட்டும் தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் 6 அடி இடைவெளியுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.