அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலைக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருவதால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுக விழா ஜூன் 3 ஆம் தேதி விர்ச்சுவல் முறையில் நடைபெற இருந்தது. இவ்விழாவில் புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்களை கூகுள் அறிவிக்க இருந்தது. இயங்குதளம் மட்டுமின்றி இதர சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக கூகுள் தெரிவித்து இருந்தது.
ஆனால், அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, போலீஸ் ஒருவர் தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ், கென்டக்கி, உட்டா, கொலம்பியா உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனால், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள பீட்டா வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும், “ஆண்ட்ராய்டு 11 பற்றி தெரிவிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை,” என கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பற்றிய புதிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.