
சென்னை: கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
கொரோனாவின் பாதிப்பு 2020 ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதன் வீரியத்தை காட்டத்தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகிவருகிறது சென்னை மாநகரம். அதிலும் குறிப்பாக திருவிக நகர், இராயபுரம், கோடம்பாக்கம் , வடபழனி போன்ற பல்வேறு பகுதிகளில் பாதிப்பின் எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் உள்ளது.

இந்த நிலையில் தான் இப்பகுதியில் வசிக்கும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன்,மிஸ்கின் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன. இந்த தகவல்கள் நயன்தாரா ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்சினிமாவில் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்திருக்கும் நடிகை நயன்தாராவுக்கு உண்மையில் கொரோனா தொற்று உறுதியாகிவிட்டதா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தான் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக வரும் செய்திகள் வதந்தி என்றும், இருவரும் நலமுடன் இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் தான் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுவருவதாகவும், நயன்தாரா உடற்பயிற்சி செய்து நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.