நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசும். 120-130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் 145கிமீ வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று, இடி மின்னல் போன்ற வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். இதனால் மக்கள் தகவல் தொடர்ப்பு சாதனமான மொபைல்களை மின்சாரம் இருக்கும் போதே ஜார்ஜ் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அது பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் சாதனமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பவர் பேங்க் போன்றவற்றிலும் ஜார்ஜ் செய்து தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். செய்திகளை தெரிந்து கொள்ள சிலர் பேட்டரி வானொலிகளை வைத்திருப்பார். அதனை பயன்படுத்துவது சிறந்தது.
இடி, மின்னலின் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றாலும் டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ், ஏசி போன்ற சாதனங்களை ஸ்விட்ச் போர்டில் இருந்து இணைப்பை துண்டிக்க வேண்டும். சில நேரங்களில் மின்கம்பங்கள் இடியால் தாக்கப்பட்டால் அதிகப்படியான மின் அழுத்தம் உங்கள் சாதனங்களை கருக்கி விடும். இதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இது போன்ற விஷயங்களில் அசட்டை வேண்டாம். ஈரக்கையால் ஒரு போதும் மின்சாதங்களை தொட வேண்டாம்.

மொபைல் டேட்டாவை தேவையான நேரத்தில் ஆன் செய்து வையுங்கள். மற்றப்படி வீட்டு wifi ஐ மட்டும் நம்பி இருப்பவர்கள் தனியாக இரண்டு மூன்று நாட்களுக்கு மொபைல் டேட்டா போட்டுக் கொள்வது சிறந்தது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முற்படுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போற்றவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.
காற்று வீசுவதை படம் எடுக்க விரும்பும் சமூக வலைதள பிரியர்கள் தேவையற்ற ரிஸ்க் எடுக்க வேண்டாம். வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது தான் சிறந்து. காற்று வீசி முடித்த பின்பும் உடனடியாக வெளியே வர வேண்டாம். அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள். மொட்டை மாடியிலோ ஜன்னல் வெளியிலோ காற்றை காண காத்திருக்க வேண்டாம். விளையாட்டு விபரீதம் ஆகும் என்பது தெரிந்ததே. கவனம் வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப இணைய வலைத்தளங்களை பார்வையிடலாம்.