பீகார் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், தாயை எழுப்பும் குழந்தையின் காட்சிகள் காண்போரின் கண்களை கலங்க வைக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, உணவின்றி, தங்குவதற்கு இடமில்லாமல், தங்களது சொந்த ஊர் திரும்பி செல்ல போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் தவித்து வந்தனர்.
இதையடுத்து, தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்ல ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவு கடந்து செல்ல தொடங்கினர். இதில், பலர் தங்களது சொந்த ஊரை அடையும் முன்னரே சாலை விபத்திலோ, அல்லது பசியிலோ பரிதாபமாக உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இதனையடுத்து மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. எனினும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் தான் மீண்டும் அரங்கேறி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட 23 வயதான புலம்பெயர் தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் பீகாரில் உள்ள முசாபர் நகர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். தான் இறங்க வேண்டிய முசாபர்நகரை அடைவதற்கு சற்று நேரம் முன்பு அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், அந்த பெண் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது சடலம் ரயில் நிலையத்தின் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அவரது மூத்த குழந்தை அழைத்து செல்லும் வரை, இளைய குழந்தை தனது தாய் உயிரிழந்தது தெரியாமல் தொடர்ந்து, அவரை எழுப்பிய படி இருந்தது.
தற்போது சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தாய் இறந்தது கூட தெரியாமல் தெரியாமல் அவரது சடலம் மூடப்பட்டிருக்கும் துணியை இழுத்து தனது தாயை எழுப்ப தொடர்ந்து அக்குழந்தை முயற்சி செய்துகொண்டிருப்பது பார்ப்போரின் மனதை கலங்கடிக்கிறது.