கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கையான தேனில் தயாரான ‘ஆரோக்ய சந்தேஷை’ சந்தைப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டியை, சுந்தரவன காடுகளில் இருந்து தருவிக்கப்படும் சுத்தமான தேனுடன் கலந்து ஆரோக்கிய சந்தேஷ் தயாரிக்கப்படவுள்ளது. இதனுடன் துளசி இலைகளின் சாறும் சேர்க்கப்படுமென மேற்கு வங்க கால்நடை வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தவித செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாராகும் இனிப்பு பண்டத்தை நகரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் விற்பனை நிலையங்களில் கிடைக்குமெனவும், சந்தேஷ் ஒட்டுமொத்தமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் இது கொரோனா தொற்றுக்கு மாற்று மருந்து அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சந்தேஷ் இன்னும் இரண்டு மாதங்களில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சாதாரண மக்களும் வாங்க கூடியதாக இருக்குமென அவர் கூறினார். அமைச்சர் மந்துராம் பக்கிரா கூறுகையில், ‛ஆரோக்ய சந்தேஷை’ தயாரிப்பதற்கான தேன், பிர்காலி, ஜார்காலி மற்றும் சுந்தரவன காடுகளின் பிற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும். அது அறிவியல் முறையில் சேமிக்கப்படும்’ என்றார்.