ஹரியானா பாஜக பெண் தலைவர் சோனாலி போகட், அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் பிரபலமும் பாஜக தலைவருமான சோனாலி போகட், அம்மாநிலத்தின் ஹிசர் மாவட்டத்தில் உள்ள பல்சாமண்ட் மண்டிக்கு சென்று பார்வையிட்டார். விவசாயிகளின் குறைகள் தொடர்பாக மாவட்ட சந்தைக் குழுவின் அதிகாரிகளை அவர் சந்திக்க சென்றார். விவசாயிகளின் வசதிக்காக அங்கு கொட்டகை அமைய உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், சோனாலி குறித்து அவதூறான, அநாகரிகமான கருத்தை கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சோனாலி அந்த அதிகாரி சுல்தான் சிங்கை செருப்பால் அடித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சோனாலி, சுல்தானை தொடர்ந்து செருப்பால் அடிக்கிறார். “ நீ உயிரோடு இருப்பதற்கு தகுதியில்லை” என்று கூறிக் கொண்டே அவர் தாக்குகிறார். ஹரியானாவில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோவில் சோனாலி உள்ளிட்ட பலர் அதிகாரிகள் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை.
அப்போது சம்பவ இடத்தில் இருந்த காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. சுல்தான் மீது வழக்குப்பதிவு செய்யும்படியும் சோனாலி காவல்துறையிடம் கூறினார்.
இதனிடையே இந்த சம்பவத்தை ஹிசர் எஸ்.பி. கங்கா ராம் புனியா உறுதி செய்துள்ளார். மேலும் அரசு அதிகாரியை தாக்கிய சோனாலிக்கு எதிராக சுல்தான் புகாரளித்துள்ளதாகவும, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கங்கா ராம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ மாவட்ட சந்தைக் குழு செயலாளர், விலங்குகளை போல தாக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் ஒருவர் இந்த செயலை செய்துள்ளார். அரசு அதிகாரி தனது கடமையை செய்வது குற்றமா..? ஹரியானா முதல்வர் மனோகர் லால், சோனாலிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா..? ஊடகங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருக்குமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.