தேசத்திற்கு எதிராக செயல்படும் அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என, பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி மற்றும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா, தனது அண்ணனுடன் சேர்ந்து தயாரித்த “பாதல் லோக்” எனும் இணைய தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

அரசியல் மற்றும் மதம் சார்ந்த பல்வேறு சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்து மதத்தை தவறாக சித்தரிப்பதாகவும், தற்போதைய அரசியல் தலைவர்கள் சிலரை குறிப்பிடுவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ நந்த்கிஷோர் குர்ஜர் என்பவர், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக அனுஷ்கா சர்மாவிற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தேசபக்தரான விராட் கோலி தனது மனைவியின் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்த கொள்ளக்கூடாது. நாட்டிற்கு எதிராக செயல்படும் அனுஷ்கா சர்மாவை உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதுதொடர்பாக அனுஷ்கா சர்மா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளிப்படவில்லை.
இதனிடையே, “பாதல் லோக்” தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இணைய தொடர்களுக்கு தணிக்கை பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி “பாய்காட் பாதல் லோக்” மற்றும் “சென்சார் வெப்சீரிஸ்” போன்ற ஹேஷ்டேக்குகளும் இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளன.