சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஆகஸ்ட் மாதம் விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்று அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் ஆசீர்வாத் ஆச்சாரி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் ட்வீட்டிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சசிகலா விடுதலையாவது, உங்களுக்கு எப்படி தெரியும் என்றும், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவார் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, இபிஎஸ், ஓபிஎஸ் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானவுடன், அவர் அதிமுகவில் இணையக்கூடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், சசிகலா விடுதலை குறித்த செய்தி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.