தமிழகத்தில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாஜக!… அண்ணாமலைக்கு எந்த தொகுதி?… கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற ஏப்ரல் மாதம் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் மீண்டும் மோடி பிரதமராக வர வாய்ப்புகள் உள்ளதாக பொதுவாக ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் நிலை பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பல அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், அண்ணாமலை பாஜக தலைமைக்கு வந்த பிறகு ஊடகங்களில் பாஜக பற்றிய செய்திகள் அதிகம் அடிபடுகின்றன. ஆனால், களத்தில் அந்தளவுக்கு அக்கட்சிக்கு நிர்வாகிகள் இல்லை என்றும் ஒரு கருத்து உலவி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30% வாக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் பாஜக சட்டமன்றத்திற்குள் நுழைய முடிந்தது. ஆனால், இப்போது அவ்வளவு பெரிய கட்சியின் துணையை இழந்துள்ளது பாஜக. அது மிகப்பெரிய இழப்புதான். இது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் கூட, செல்வாக்கு மிக்க கட்சியின் துணை பாஜகவுக்கு கட்டாயம் தேவை.

அந்தப் பலத்தை ஈடுசெய்ய அண்ணாமலை, இரண்டாம் நிலையில் உள்ள கட்சிகளோடு, சில உதிரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை அமைக்க உள்ளார். அந்தக் கூட்டணி ஏறக்குறைய இறுதி வடிவத்தை எட்டி விட்டது என்று சொல்கிறார்கள். இந்த மாதம் 18 ஆம் தேதி அன்று அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூரில் முடிவடைய உள்ளது. அதன் நிறைவு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் பாஜக தமிழ்நாட்டில் மொத்தம் 20 தொகுதிகளில் களம் இறங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த அளவுக்குப் பலம் பொருந்திய கட்சி இல்லை பாஜக. மேலும், பாஜகவைவிட வடதமிழ்நாட்டில் செல்வாக்கு நிறைந்த பாமகவுக்கு பாஜக கூட்டணியில் வெறும் 7 இடங்களைத்தான் அண்ணாமலை ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. அதாவது 2024 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்தச் செய்தி இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இந்தத் தகவல் சக கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 20 தொகுதிகள் எவை? தூத்துக்குடி-சசிகலா புஷ்பா நிறுத்தப்படலாம் எனப் பேச்சு அடிப்படுகிறது. ஆனால், கனிமொழி ஆளும் கட்சி பலத்துடன் உள்ளார். அந்தத் தொகுதியில் அவருக்கு செல்வாக்கும் உள்ளது. கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்தான். நெல்லையில் நயினார் நாகேந்திரன் நிற்கலாம். சிதம்பரம் விசிகவின் கோட்டை. தனித்தொகுதியும் கூட. ஆகவே அங்கே திருமாவளவன் நிற்கிறார். அவரை எதிர்க்க பலம் பொருந்திய நபர் தேவை. அதற்காக அங்கே தடா பெரியசாமியை களம் இறக்குகிறது பாஜக. விருதுநகரில் ராம சீனிவாசன் போட்டி என்று தகவல்.

கிருஷ்ணகிரி – கேஎஸ் நரேந்திரன், ஈரோடு – கேபி ராமலிங்கம், சேலத்தில் ஜி.கே.நாகராஜனும், திருப்பூரில் கனகசபாபதியும், நீலகிரியில் எல்.முருகனும், வடசென்னையில் பால் கனகராஜும், மத்திய சென்னையில் குஷ்புவும் தென் சென்னையில் கரு நாகராஜனும் போட்டிப் போட உள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டிப் போடலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது போக அமமுக மற்றும் ஒபிஎஸ் அணிக்கு 7 இடங்களும் புதிய நீதிக்கட்சி, ஜான்பாண்டியன் மற்றும் ஐஜேகேவுக்கு தலா 1 இடமும் தேமுதிகவுக்கு 2 இடங்களும் பாஜக கூட்டணி ஒதுக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

1newsnationuser3

Next Post

10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு...! விரைவில் வரப்போகிறது மாற்றம்...! முழு விவரம்

Fri Feb 2 , 2024
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் 3 மொழிகள், 7 பிற பாடங்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 6 தாள்கள் புதிதாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் இரண்டு மொழி பாடங்களுக்கு பதிலாக மூன்று மொழிகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை முன்வைத்தது, குறைந்தது இரண்டு கட்டாய இந்திய மொழிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தவிர, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி அளவுகோலில், சிபிஎஸ்இ ஐந்து பாடங்களில் தேர்ச்சி […]

You May Like