கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வெண்டிலேட்டர் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்ட பொலிவியா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதனால், ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் என்பது இன்றியமையாதது. அதனால், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை அனைத்து நாடுகளும் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன.

இதனிடையே, தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, வெண்டிலேட்ரை ஸ்பெயினிடம் இருந்து வாங்க பொலிவியா முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 170 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி வென்டிலேட்டர்கள் கொள்முதலின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும், சராசரியாக ஒரு வெண்டிலேட்டருக்கு தலா 27 ஆயிரத்து 683 டாலர்கள் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கொள்முதல் அந்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலே நவஜென்ஸ் தலைமையில் நடைபெற்று பணமும் ஸ்பெயின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணய அளவுகோளை பூர்த்தி செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், வெண்டிலேட்டரின் உண்மை மதிப்பு 7 ஆயிரத்து 194 டாலர்கள் என்பதும் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு பொலிவிய அரசு வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்திருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் கண்டுபிடித்தன.

இது அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரின் பதிவி பறிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவர் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமானது. இதையடுத்து, ஊழல் செய்த குற்றத்துக்காக அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.