
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில், நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டி வைத்திருப்பதாக தெரிவித்து அழைத்து துண்டித்துவிட்டார் மர்ம நபர் ஒருவர். இந்த தகவலையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளனர். தற்போது கொரோனாவின் தீவிரம் சென்னையில் அதிகரித்துவரும் நிலையில் வெளி நபர்களை வீட்டினுள் சோதனை மேற்கொள்வதற்கு முதலில் ரஜினி தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி தகவல்களை தெரிவித்ததையடுத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதியானது. இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வந்த செல்போனின் நம்பரை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.