பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, அதனை சிறிய காய்ச்சல் என்று அந்நாட்டு ஜெயிர் பொல்சனோரா அழைத்து வந்தார். மேலும் சமூக விலகலை பின்பற்றாமலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாமலும் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டடதாக சர்ச்சையில் சிக்கினார் அதிபர்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிபர் பொல்சனோரோ தெரிவித்துள்ளார். அந்நாட்டு தலைநகர் பிரேசில்லாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ நேற்று முன் தினம் முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. நேற்று, எனக்கு உடல் சோர்வும், காய்ச்சலும் இருந்தது. இதனையடுத்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.
எனது கொரோனா பரிசோதனைகள் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. அதற்காக ஹைட்ரோகுளோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் ஆகிய மருந்துகளை எடுத்து வருகிறேன். எனினும் எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. நான் தற்போது நன்றாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதிபருக்கு ஏற்கனவே முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த 3 சோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்ற முடிவு வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோன பாசிட்டிவ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.