10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியதால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று சமூக அறிவியல் பாடத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தான், இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.