கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
224 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்க 440 கோடி ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் உடுப்பி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு மேல் செல்லவும், பட்டாசு வெடிக்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.