திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியில் 29 வயதான இன்பகுமார் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஆம்பூர் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக இன்பகுமார் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும், இன்பகுமாருடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அது மட்டும் இல்லாமல், நான் உன்னை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி, இன்பகுமார் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். மகள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது குறித்து தங்களின் மகளிடம் விசாரித்த போது, சிறுமி நடந்த சம்பவத்தை எல்லாம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இன்பகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இன்பகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்பகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார். மேலும், அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்பகுமாரை ஆம்பூர் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.