சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சின்னமுத்தூர் பகுதியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சி அடைந்துள்ளது. லஞ்சம் கொடுக்காமல் எந்த கோரிக்கையும் நிறைவேறாது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கொலை கொள்ளை போதை பொருட்களால் பிரச்னைகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் 5800 பார்களில் 4 ஆயிரம் பார்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் இயங்கும் 4000 பார்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ள திமுக அரசு, தற்போது குப்பைக்கு வரி விதித்திருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நடப்பதற்கு கூட வரி விதிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.