செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்த நிலையில், இத்திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன் என்ன? : அரிய, அழிந்துவரும் தாவர இனங்கள் உட்பட தமிழ்நாட்டின் பூர்வீக தாவர வகைகளை பாதுகாத்து, தாவரவியல் பூங்கா பொழுதுபோக்கு மையமாகவும் மற்றும் சூழல்-சுற்றுலா மையமாகவும் உருவாக்கப்படும்.
மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.
இத்திட்டத்தில், வழிகாட்டப்பட்ட நடைப்பயிற்சி, தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெறும்.
படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.
மாவட்டத்திற்குரிய உணவு வகைகள் மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரம், விவசாயிகள் மற்றும் தொழில்கள் மேம்படும்.
இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் : மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்தல், போன்றவற்றிற்கு விரிவானதிட்ட அறிக்கை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 1 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா, கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.