அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற மொத்தம் நான்கு பேர் போட்டியிடுவதாக புதுச்சேரி மேற்கு பிரிவு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் பரபரப்பை கிளப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புதுச்சேரி கிழக்குப் பகுதி செயலாளரான அன்பழகன் சசிகலாவிடம் கிலோ கணக்கில் தங்கமும், கோடிக்கணக்கில் பணத்தையும் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவளித்துவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கடந்த நான்கு ஆண்டுகளில், ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து ஏழு முறை லட்சக்கணக்கில் கையூட்டாக பணம் பெற்றதாக ஓம் சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க-வில் புதுச்சேரி கிழக்கு பிரிவு மாநில செயலாளரான அன்பழகன் செய்த முறைகேடுகளை அடுக்கடுக்காக பட்டியலிட்ட மேற்கு பகுதி மாநில செயலாளரான ஓம் சக்தி சேகர், அன்பழகன் குறித்து மேலும் கூறியதாவது, அன்பழகன் சொத்து ஏலத்துக்கு வந்ததால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தி.மு.க-வின் மாஜி எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களிடம் தலா 5 லட்ச ரூபாய் என ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓ பன்னீர்செல்வத்திடம் ஏழுமுறை லட்சக்கணக்கில் பணம் கையூட்டாக பெற்றதாகவும் ,அவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பேனரில் உள்ள பன்னீர் செல்வத்தின் போட்டோவை கிழித்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றுவதற்காக பெறப்பட்ட பணம் எங்கே? எனவும் இந்த பணத்தை யாருக்காவது பிரித்துக் கொடுத்துள்ளாரா? எனவும் கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க-வில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி வரும்போது அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார் என்று கூறிய ஓம் சக்தி சேகர் கட்சியின் கொடியும் சின்னமும் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.