ஆந்திராவில் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க வருவதால், 400 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு சினிமா டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டது. இதனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சினிமா டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக ரசிகர்கள் திரையரங்கு வருவது குறைந்துள்ளது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை தங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதால் திரையரங்கு வந்து செய்யும் செலவுகள் பெரும்பாலும் குறைத்துள்ளது.
இதன் காரணமாகவும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதாலும் ரசிகர்கள் திரையரங்கு வருவது குறைந்துள்ளது. 30 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்து படம் பார்ப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ரசிகர்களின் வருகை குறைந்ததால் ஒரு காட்சிக்கு ரூ.2,000 – 3,000 என்கிற நிலையிலேயே வசூலாகிறதாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சினிமா தியேட்டர்களை சரியாகப் பராமரிக்க முடியவில்லை எனவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏசி திரையரங்கை பராமரிக்க 5,000 ரூபாயும் ஏசி அல்லாத திரையரங்கை பராமரிக்க 2,000 ரூபாயும் தேவைப்படுகிறது. இது தவிர மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளும் இருக்கின்றன.
ஆனால், சமீபகாலமாக 10, 15 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதால் இந்த தொகையை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் குமுறுகின்றனர். இப்படி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு ஆந்திராவில் 400 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தசரா அல்லது பொங்கல் பண்டிகையின்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும். அதுவரை தியேட்டர்களை மூடிவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.