கர்நாடகா மாநிலம் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்தவர் 48 வயதான தீபா. திருமணமாக இவர், இந்திரா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். டிரைவரான இவர், தீபாவை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையேயான அறிமுகம் நட்பாக மாற, பீமா ராவ் தீபாவின் உறவினர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார்.
இப்படி இருக்க, தீபாவிடம் பீமா ராவ் தன்னை காதலனாக ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தீபா, பீமா ராவை தவிர்க்க ஆரம்பித்துள்ளார். அவரது மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கு ரிப்ளை செய்வதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்.27ஆம் தேதி கடைக்கு செல்வதற்கு டிராப் செய்ய பீமா ராவ்வை தீபா அழைத்துள்ளார். அப்போது காரில் பயணித்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் முன்பு போல ஏன் பேசவில்லை என்று பீமா ராவ் கேட்க, இந்த தகராறில் தீபாவை பீமா ராவ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் சடலத்தை பாகலூர் அருகே உள்ள வாய்காலில் வீசியுள்ளார்.
தீபா திடீரென மாயமானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் டிரைவர் பீமா ராவை விசாரித்த போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து டிரைவர் பீமா ராவ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.