பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரத்தில் மீட்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். பின்னர், வீட்டுக்கு செல்லாமல் 5 மாணவிகள் மயமாகியுள்ளனர். நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு வராததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அனைத்து மாணவிகளே தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். இதையடுத்து, எங்கும் கிடைக்காததால் நேற்றிரவு பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளிடம் செல்போன் உள்ளதா..? எப்போது கடையாக பேசினார்கள்..? என்பது போன்ற விவரங்களை எல்லாம் பெற்றோர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து மாயமான மாணவிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து, 5 மாணவிகளில் ஒருவர் மட்டும் செல்போன் எடுத்து சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது அவர்கள் திருச்சியில் இருப்பதாக காட்டியது. இதனைத் தொடர்ந்து, திருச்சி விரைந்த காவல்துறையினர், 5 மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர்.
பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் 5 பேரும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து மாணவிகள் மீட்கப்பட்டு பவானிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்று சாமி தரிசனம் செய்ய பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் மாணவிகள் 5 பேரும் சமயபுரம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 மாணவிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Read More : பயணிகளுக்கு செம குட் நியூஸ்..!! ரயில் பெட்டியில் ஏடிஎம் வசதி..!! இனி பயணித்துக் கொண்டே பணம் எடுக்கலாம்..!!