மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இரண்டு பெட்டிகளில் 50க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் அறிக்கை படி கண்டெடுக்கப்பட்ட டெட்டனைட்டர்கள் மலைகளை உடைக்க பயன்படுத்துபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் வெடி பொருட்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிபொருட்கள் ரயில் நிலையத்திற்குள் எப்படி வந்தது.? யாரேனும் மறந்து விட்டு சென்றார்களா.? அல்லது வேண்டுமென்றே ரயில் நிலையத்தில் வைத்து சென்றார்களா.? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் முதலாவது நடை மேடை அருகே இரண்டு பெட்டிகளில் 50 வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் நடைமேடை அருகே கவனிக்கப்படாமல் கிடந்த பெட்டியில் 50க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பதை ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கவனித்தனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டை செயலகச் செய்யும் படைகளும் ரயில்வே நிலையத்திற்கு வரவழைக்க வைக்கப்பட்டது. மேலும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.
எடுத்துச் செல்லப்பட்ட பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் 54 சிறிய அளவு வெடிபொருட்களை கொண்ட டெட்டனேட்டர்கள் இருந்ததாக வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
வழக்கமாக, தானே மாவட்டத்தில் ஏரிகளில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கும், குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை உடைப்பதற்கும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டெட்டனேட்டர்கள் தண்ணீரின் வழியாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி மீன்களை கொல்வதற்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.