6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 13) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை டிரக் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரவு 11 மணியளவில் சிறுமி கூலி வேலை செய்யும் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிசிடிவி காட்சிகளில் பல்ராம் என்ற நபர் சிறுமியை தோளில் சுமந்து கொண்டு, அருகில் இருக்கும் இருண்ட பகுதிக்கு நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சிறுமியை அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று பல்ராம் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றுள்ளார். சிறுமி மாயமானதை அறிந்த தாய், தனது சக ஊழியர்களிடம் கூறி சிறுமியை தேட ஆரம்பித்தார். பின்னர், அவர்கள் சிறுமியின் உடலை முட்புதரில் கண்டெடுத்தனர்.
பின்னர் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல்ராமை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.