காஞ்சிபுரம் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனையை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான மைதானங்கள் உள்ளன. இங்கே ஏராளமான விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு வாலாஜாபாத் பகுதியைச் சார்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் தனது பயிற்சி தொடர்பான சான்றிதழ்களை தனது பயிற்சியாளரிடம் கேட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பயிற்சியாளர் சான்றிதழ்கள் தனது வீட்டில் இருப்பதாக கூறி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார் பயிற்சியாளர் விஸ்வகாஞ்சி. அவரிடம் இருந்து தப்பித்த அந்த மாணவி அப்பகுதி மக்களின் உதவியுடன் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை பயிற்சியாளர் விஸ்வகாஞ்சியை கைது செய்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மேலும் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.