fbpx

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர்..!! வந்தது புதிய சிக்கல்..!! அப்படி என்ன கேட்டார் தெரியுமா..?

இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த பயணத்தில் மிகவும் முக்கிய நிகழ்வு என்பது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோரின் சந்திப்பாகும். இந்த இரு தலைவர்களின் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நடந்தது. அன்றைய தினம் பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். மோடியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான தொழில், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். பிறகு வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது ”இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. ஆனால், உங்கள் அரசு மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், எதிர்கருத்து கூறுபவர்களை மவுனமாக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் பல மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என கேட்டார்.

இதற்கு பிரதமர் மோடி, ”இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் ஒவ்வொருவரின் டிஎன்ஏவிலும் உள்ளது. ஜனநாயகத்தின் படியே வாழ்ந்து வருகிறோம். எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை” என்றார். இதற்கிடையே, பத்திரிகையாளர் கேள்வி மற்றும் பிரதமர் மோடி அளித்த பதில் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கின. மேலும், மோடியிடம் இந்த கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் பின்னணி பற்றியும் விவரம் வெளியானது. அதன்படி, அவரது பெயர் சப்ரினா சித்திக். இவர் வால்ஸ்டீரிட் பத்திரிகையாளர் ஆவார். இந்த பத்திரிகை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிலையில் சப்ரினா சித்திக் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், சப்ரினா சித்திக்கின் தந்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான். அதன்பிறகு பாகிஸ்தான் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசிக்க தொடங்கினர். அமெரிக்காவில் தான் சப்ரினா சித்திக் பிறந்து பத்திரிகையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதற்கிடையே தான் சிலர் சப்ரினா சித்திக்கை ட்விட்டரில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அவர்கள் பிரதமர் மோடி சிறப்பாக பதிலளித்துள்ளார். மேலும், சப்ரினா சித்திக் யார் சார்பில் இந்த கேள்வியை கேட்டார். இடதுசாரிகள் சார்பில் அவர் கேட்டாரா? இல்லை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கேட்டரா? இல்லாவிட்டால் டூல்கிட் கும்பலுக்கு (காங்கிரஸை விமர்சிக்க சமீபகாலமாக பயன்படுத்தப்படும் வார்த்தை) ஆதரவாகவா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் இன்னொரு நபரோ, ”சப்ரினா சித்திக் இந்தியா-பாகிஸ்தானிய தந்தைக்கும், பாகிஸ்தானிய தாய்க்கும் பிறந்தவர். இதனை புரிந்து கொண்டால் அவர் யாருக்காக கேள்வி கேட்டுள்ளார் என்பதை உணரலாம்” எனக்கூறியுள்ளனர். மேலும், சிலர் இதேபோல் அவரை விமர்சனம் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக டூல்கிட் கும்பலை சேர்ந்தவர் என சப்ரினா சித்திக்கை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கிடையே, சப்ரினா சித்திக்கிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் வெளிநாடுகளை சேர்ந்த சில பிரமுகர்களுக்கும் சப்ரினா சித்திக்கிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சப்ரினா சித்திக் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணிக்கு முழு மதிப்பெண் தரலாம்” என ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால் தற்போது இது ட்விட்டரில் விவாதமாக தொடர்ந்து வருகிறது.

Chella

Next Post

தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை – செல்லூர் ராஜூ

Sun Jun 25 , 2023
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த […]
”கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிறுத்தி வைத்த நிதியமைச்சர்”..! - செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

You May Like