பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்நிலையில், இன்று பூமிக்கு நெருக்கமாக 720 அடி அளவு கொண்ட 2024 ON எனும் விண்கல் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனை நியூயார்க் போஸ்ட் உறுதி செய்திருக்கிறது.
இந்த விண்கல் சுமார் இரண்டு கால்பந்து மைதானம் சைஸில் இருக்கும் என்றும், இது 10 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இந்த தூரம் நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தை விட இது வெறும் 2 மடங்கு தொலைவுதான். இது மிகச்சரியாக செப்.15ம் தேதியன்று பூமியை கடக்கும் என்று நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்த விண்கல் பூமிக்கு நெருக்கமாக செல்லும்.
இது ஏறத்தாழ 38,499 கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமியை தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி பூமியை தாக்கினால்.. 3000 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் வெடித்தால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கல் விழுந்த இடத்தில் சுமார் 8 கி.மீ விட்டத்திற்கும், 3 கி.மீ ஆழத்திற்கும் பெரும் பள்ளம் உருவாகும். இதன் தாக்கத்தால் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். அதேபோல சுனாமியும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.