இந்தியாவின் முதல் ஏஐ தொழில்நுட்ப பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்பங்களினுடைய அதி தீவிர வளர்ச்சி உலகின் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ ஐ பல்வேறு துறைகளில் தொடர்ந்து கால் பதித்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் ஏஐ ஆதிக்கம் செலுத்தாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதனுடைய பரவல் அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏ ஐ தொழில்நுட்ப பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. இதை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் ஏஐ தொழில்நுட்ப பள்ளி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் ஏ ஐ தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது, கல்வி கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்விக்கு முழுமையான ஆற்றலை பயன்படுத்தும் நோக்கிலும் ஏ.ஐ தொழில்நுட்ப ஆசிரியர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மாணவர்களுடைய தனித்துவம் பாதிக்கப்படாத வகையில் கற்றல் கற்பித்தல் முறைகளில் மேம்பட்டை ஏற்படுத்தவும் வழி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை இதன் மூலம் அளிக்க முயற்சி மேற்கொண்டு இருக்கின்றோம். இது மாணவர்களுக்கு புதுமையான அனுபவமாகவும் இருக்கும். சவால்களை எதிர்கொள்ள இது வழியாக அமையும்.
இது மட்டுமல்லாது ஏஐ தொழில்நுட்ப ஆசிரியை மூலம் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் கவுன்சிலிங், கேரியர் ஆலோசனை, எளிய முறையில் கற்றலை கொண்டு செல்லும் உத்தி, மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கான பயிற்சி, நேர்காணல் செய்வதற்கான ஆற்றல், திறன் மேம்பாடு, குழு விவாதம், கணித முறை கற்பித்தல், அடுத்து என்ன படிக்கலாம், வெளிநாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள் விவரங்கள் ஆகியவை மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.