கர்நாடகாவைச் சார்ந்த ஆசிரியை கணவரின் கொடுமையால் வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலங்களாக அர்ஜுன் மற்றும் ரூபா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு ஆசிரியை ரூபாவை கடுமையாக கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ரூபா.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற ரூபா மாணவர்கள் வகுப்பறையில் இல்லாத நேரத்தில் அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த ரூபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது சக ஆசிரியர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவர் உட்பட ஆறு பேரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கிறது காவல்துறை. ஆசிரியை ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளியிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.