ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 14-8-2021 அன்று “ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று எடுத்துக் கொள்ள தொழில் துறை, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினைத் திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி, மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
இவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தொழில் துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் 1959 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில், விதி 12(2)-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும், ஏரி மற்றும் குளங்கள் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 101) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் வேளாண் பெருமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிட வேண்டும். இந்நேர்வில், 20 நாட்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.
Also Read ; ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!