H3N2 வைரஸ் கொரோனா போல பரவி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் உருமாற்றம் அடைந்து கொண்டிருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை H3N2 வைரஸ் நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவமனைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது. பலருக்கும் காய்ச்சல் குணமான பிறகும் சில நாட்களுக்கு தொடர் இருமல், சளி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் நீடிக்கிறது. கடந்த சில வாரங்களாகவே அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காய்ச்சலால், மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு காய்ச்சல், இடைவிடாத இருமல், தொண்டை வலி இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த வைரஸ் பதிப்பு ஏற்படாமல் இருக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். இருமல்-தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைகள் இன்றி மருந்து மாத்திரைகளை எடுக்கக் கூடாது. நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுன் போன்ற அறிவுறுத்தல்களையும் மருத்துவத்துறையினர் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், H3N2 வைரஸ் கொரோனா போல பரவுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் உருமாற்றம் அடைந்து கொண்டிருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விரைவில் பண்டிகை காலங்கள் தொடங்க உள்ள நிலையில், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, முதியோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வைரஸ் லேசாக உருமாற்றம் அடைந்து இருப்பதால் வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியும் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக எளிதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.