இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாதவர்களிடம் பெண் குழந்தைகள் பழகுவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது இன்றைக்கு கட்டாயம் ஆகும். சில பெண் குழந்தைகள், இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்யும் நட்பாக பழகுகின்றனர். அப்படி பழகும் பெண்களை குறிவைத்து ஏமாற்றுவதை சில 2கே கிட்ஸ் இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். காதல் என்ற பெயரிலும், நட்பு என்ற பெயரிலும் வலைவிரிக்கும் சில 2கே கிட்ஸ்களின் வலையில் விழும் டீன் ஏஜ் குழந்தைகள், கடைசியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காரணமாக ஹரிஷ் வெளியில் அழைத்துள்ளார். அவரை பார்க்கும் ஆசையில் இளம்பெண் கடந்த 26ஆம் தேதி வெளியில் செல்ல முடிவு செய்தார். தனது தாயிடம், தோழியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செங்கல்பட்டு சென்றுள்ளார்.
அங்கு ஹரிஷ் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். இருவரும் இரண்டு நாட்கள் தனிமையில் தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஹரிஷ், தனது நண்பர்கள் இருவரை வரவைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் தவித்த அப்பெண், நேற்று முன்தினம் இரவு, சிட்லப்பாக்கம், சங்கர் நகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சகோதரருக்கு மாறி மாறி செல்போனில் குறுஞ்செய்தி மற்றும் லொக்கேஷனை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து, அவரது சகோதரர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பல்லாவரம் மகளிர் போலீசார், சங்கர் நகர் அருகே அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பெண்ணை அழைத்து வந்த ஹரிஷ் எந்த பகுதியை சேர்ந்தவர், எந்த இடத்தில் தங்கினர், ஹரிஷின் நண்பர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் போலீசுக்கு தெரியவில்லை.
இது தொடர்பாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்தால் மட்டுமே நடந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில், இளம்பெண் மாயமானதாக புகார் பதிவாகியுள்ளது. அந்த வழக்கை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 3 பேரை கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.