கோவை மாவட்டத்தில் உள்ள பார்களுக்கு மது அருந்த வருவோர், டிரைவருடன் வர வேண்டும் என்பதை மதுபானக்கூட உரிமையாளர், நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை போலீஸ் கூறியுள்ளதாவது: மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். ஆகஸ்ட் 23 முதல் 25 ஆம் தேதி வரையிலான கடந்த 3 தினங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல் துறையில மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில், 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுக்கும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் மதுபானக்கூட உரிமையாளர், நிர்வாகிகள் தங்களது மதுபானக் கூடத்திற்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் சொந்த டிரைவருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மது அருந்தியுள்ள ஒருவர் டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்குத் தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும்.
அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்பந்தப்பட்ட மதுபானக்கூடம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மது அருந்த தங்களது மதுபானக் கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.
மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதுபானக் கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதை தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும்.
சிசிடிவி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். காவல் துறையினர் கோரும்போது அது அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலே கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Read more ; நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தரும் அரசு..!! – சேலம் ஆட்சியர் அழைப்பு