நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம் என்று வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லம் தேடிக் கல்வியின் நோக்கமும் அது தான் என தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் சந்தித்து பேசிய நடிகர் விஜய், காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் இரவு நேர பாடசாலை தொடங்குவது பற்றி சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று ’தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இரவு நேர பாடசாலையை ஆரம்பிக்கவுள்ளனர். ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர், அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அவரது ரசிகர் மன்றத்தினர் மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க தொடங்கிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லாத நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்நிலையில், இன்று அவர் தொடங்கும் இரவு நேர பாடசாலையும் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளன. நடிகர் விஜய் முன்னெடுக்கும் இந்த திட்டத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கமும் அது தான் என்பதை பளிச்சென்று கூறியிருக்கிறார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் கல்வியை கைவிட்டவர்களை சேர்ப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.