கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..
இந்த சூழலில், நேற்று நடந்த இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 15 நாட்களுக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
இதனிடையே மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி, முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரிப்பிரியா, கிருத்திகா என்ற 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.. மேலும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தொடர்பாக அரசியல் செய்ய கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்..