”சிகிச்சை தேவை இருக்கும் ஒரு நபராக இதைப் பதிவிட்டேனே தவிர, ஒரு நடிகையாக அதைப் பதிவிடவில்லை. இத்தகைய பதிவுகளுக்காக யாரிடம் பணம் பெறவில்லை” என நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பலராலும் ‘தி லிவர் டாக்டர்’ என அறியப்படும் மருத்துவர் சிரியக் ஆபி பிலிப்ஸ், “சுகாதாரம் மற்றும் அறிவியல் பற்றிப் போதுமான கல்வியறிவு இல்லாத இந்திய நடிகை சமந்தா. இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களை, வைரல் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்க அறிவுறுத்துகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிப்பதாகவும் கூறியுள்ளார்.
பகுத்தறிவு மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ந்த சமூகம் என்றால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவுக்கும் வகையில் செயல்பட்ட இவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்திருப்பார்கள் அல்லது சிறையில் அடைத்திருப்பார்கள் என்றும் காட்டமாகப் பதிவிட்டிருந்த மருத்துவர், நடிகை சமந்தாவுக்கு உதவியும், நல்ல ஆலோசகரும் தேவை என்று கூறியிருந்தார். சமூக ஊடகங்களில் இதுபோன்று மருத்துவம் தொடர்பாகப் பதிவிட்டு மக்களின் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது ஏதேனும் நடவடிக்கையை இந்திய சுகாதாரத்துறை எடுக்குமா..? என்ற கேள்வியையும் அந்த மருத்துவர் முன்வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவின் பதில்…
மாற்று மருத்துவத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதாக மருத்துவர் சிரியக்கின் விமர்சனத்துக்குப் பதிலளித்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிலிருந்து கற்றுக்கொண்டு அவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருவதாகவும் கூறினார். நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளைக் காட்டிலும் இந்த சிகிச்சைகளுக்குக் குறைவாகவே செலவாகிறது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதுபோன்ற சிகிச்சை முறைகளுக்கு முழுமையான ஆதரவை அவர் அளிக்கவில்லை என்றும், மக்களுக்குப் பயனளிக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே இதை மேலோட்டமாகப் பரிந்துரை செய்ததாகவும் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்கும் முறையை டி.ஆர்.டி.ஓ.வில் மருத்துவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய மித்ரா பாசு சில்லார்தான் பரிந்துரைத்தார். நவீன மருத்துவத்தைக் கற்றுக்கொண்ட அவரே, மாற்று சிகிச்சைகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்” என்றும் சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சிகிச்சை தேவை இருக்கும் ஒரு நபராக இதைப் பதிவிட்டேனே தவிர, ஒரு நடிகையாக அதைப் பதிவிடவில்லை. இத்தகைய பதிவுகளுக்காக யாரிடம் பணம் பெறவில்லை. நவீன சிகிச்சைகள் பயனளிக்காமல் மாற்று மருத்துவத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காக அதை மேலோட்டமாகப் பரிந்துரை மட்டுமே செய்தேன் என்று சமந்தா கூறியுள்ளார்.
Read More : மக்களே..!! பான் கார்டில் மறைந்திருக்கும் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? இது தெரியாம இருக்காதீங்க..!!